Wednesday, March 18, 2009

கடவுளும் மரணமும்

கடவுளும் மரணமும்

எப்பொழுதும் என்னை சூழ்ந்து இருக்கிறது மரணம்.
காலையிலும், மாலையிலும்,
பாதையிலும் , படுக்கை அறையினிலும்,
மரணம் வராத நேரம் என்று எதுவும் இல்லை,
மரணம் புகாத இடம் என்றும் எதுவும் இல்லை.
கடவுளும் அப்படித்தானோ?

ஏழு வயதில் நான் பார்த்த மரணம்
தினமும் தூங்கும் முன் திருநீறு இட வைத்தது.
மரணபயத்திற்கு பின்புதான்
கடவுள் நம்பிக்கை வந்ததென்று நினைக்கிறேன்.

"கடவுளுக்கு மரணம் இல்லையா?"
என்று கேட்டு இருக்கிறேன்.
"மரணத்திற்கு என்றே ஒரு கடவுளும் உண்டு"
என்றும் நம்பி இருக்கிறேன்.

வாழ்க்கை என்பது உண்மையை தேடும் பயணம் என்றால்
இங்கு மரணம் மட்டுமே உண்மை.

எத்தனையோ தேடுகின்றேன்..
எதை அடைவேன், எதை விடுவேன்..
எனக்கே தெரியாது..
ஒன்றை மட்டும் உறுதியாய் நான் அடைவேன்.
அது மரணம் என்று சொல்லவும் வேண்டுமோ!

அது வரும் ஒரு கணத்திற்கு முன்
என் தேடுதலை எல்லாம் நிறுத்தி
வணங்க வரம் கிடைத்தால்
நானும் கடவுளாவேன்.